நீலகிரி மாவட்டம் கூடலூர் இரும்புபாலம் பகுதியை சேர்ந்த குடும்பத்தலைவர்கள், „மது குடித்து விட்டு கோவிலுக்கு வருவதில்லை‘ என, சூடம் ஏற்றி சத்தியம் செய்தனர்.

கோவில் திருவிழாவில் ஏற்படும் பிரச்னைக்கு மூல காரணமாக இருப்பது போதை தான். மது குடித்தவர்கள், கோவில் விழாக்களுக்கு வராமல் இருந்தாலே, பெரும்பாலான திருவிழாக்கள் அமைதியாக நடந்து விடும்.
இதற்கு முன்உதாரணமாக, கூடலூர் இரும்பு பாலம் சக்தி விநாயகர் கோவிலில், „மது குடித்துவிட்டு கோவிலுக்கு வர மாட்டோம்,‘ என அங்குள்ள குடும்பத்தலைவர்கள், சூடம் ஏற்றி சத்தியம் செய்துள்ளனர்.

இதற்கான நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. கோவில் தலைவர் முருகன் முன்னிலையில், அப்பகுதி ஆண்கள் கோவிலில் ஏற்றப்பட்ட சூடத்தின் முன் நின்று, „மது குடித்து விட்டு கோவிலுக்குள் வரமாட்டோம்; கோவில் விழா நடக்கும் காலத்தில் மது குடிக்க மாட்டோம்; மது குடித்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம்‘ என சத்தியம் செய்தனர்.

இவர்களின் முடிவை அப்பகுதி பெண்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் கோவில் கமிட்டி செயலாளர் ரவி, பொருளாளர் வேலு மற்றும் அப்பகுதியினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

போதை பழக்கத்துக்கு எதிராக இவர்கள் மேற்கொண்டுள்ள முதல் முயற்சி, சில மாதங்களில் அவர்களை இந்த பழக்கத்தில் இருந்தே விடுபட வைக்கும்‘ என, அப்பகுதி பெண்கள் கருத்து தெரிவித்தனர்