ஹெரோயின் போதைப் பொருள்களை மாணவர்களுக்கு விற்பனை செய்தார் என்ற சநதேகத்தில் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இரண்டு மணிநேரத்தில் 45 ஆயிரம் ரூபா பணம் போதைப்பொருள் விற்பனையூடாகப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: ஹெரோயின் மற்றும் ஏனைய போதைப் பொருள்களைப் பயன்படுத்திய மாணவர்கள் சிலரை கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்தனர். அந்த மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அன்றைய தினம் குறித்த நபர் ஒருவர் மூலம் மட்டும் யாழ் நகரில் இரண்டு மணிநேரத்தில் 45 ஆயிரம் ரூபாவுக்கு போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள் யாழ்ப்பாணத்துக்கு தென்பகுதியிலிருந்துதான் கொண்டு வரப்பட்டதா என்பது தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரி.இந்திரனிடம் கேட்டபோது, தென்பகுதியிலிருந்துதான் போதைப் பொருள்கள் இங்கு கொண்டு வரப்படுகின்றன என்று சொல்ல முடியாதுள்ளது. எம்மால் கைது செய்யப்பட்டவர் மூலமாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக மேலும் சிலரைக் கைது செய்துள்ளோம்  என்றார்.