உலகில் மிகவும் பழமையானது என்று நம்பப்படும் மனித மூளையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

யோர்க் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அகழ்வு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்தப் புராதன மனித மூளை கிடைத்துள்ளது.

மண்டை ஓடு தான் இங்கிருந்து மீட்கப்பட்டது. ஆனால் மண்டை ஓட்டுக்குள் மூளையும் இருந்தமை கண்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இது 2500 வருட பழமையானது என நம்பப்படுகின்றது. அதிசயிக்கத்தக்க வகையில் பத்திரமாகவும் உள்ளது.இந்த எலும்பில் காணப்படும் தடயங்களைக் கொண்டு இந்த நபர் 26—45 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது.

மேலும் இந்த நபர் தூக்கில் தொங்கி இறந்திருக்கலாம் என்றும் இவர் இறந்த பின்பு சமயக் கிரியை ஒன்றுக்காக இவரின் தலை கொய்யப்பட்டு புறம்பாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த மூளையிலுள்ள திசுக்கள் எவ்வாறு சேதமடையாமல் பத்திரமாக உள்ளன என்பது தான் ஆய்வாளர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.சாதாரணமாக மனித மூளையின் திசுக்கள் மரணித்து சில ஆண்டுகளில் பட்டுப்போய்விடும்.

பிரட்பர்ட பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த இடத்தில் தொடர்ந்து அகழ்வுப் பணிகளும் இடம்பெறுகின்றன.