சதுரங்கம் அரசர்களின் விளையாட்டு மட்டுமன்றி மதியுகமும் தந்திரமும் கொண்ட விளையாட்டாகும்.மாளிகைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த இந்த விளையாட்டு இன்று உலகின் பிரபல விளையாட்டுகளில் ஒன்றாக விளங்குவதுடன் மனித இனத்தின் பிரபல விளையாட்டுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.

சதுரங்கம் விளையாட்டாக மட்டுமன்றி ஒரு கலையாகவும் அறிவியலாகவும் வர்ணிக்கப்படுகின்றது.சில சமயங்களில் மூளை சார்ந்த போர்க்கலையாகவும் பார்க்கப்படுகின்றது. தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு எதிரியின் அரசனை பிடிப்பதே ஆட்டத்தில் சூட்சுமம் அந்த சூட்சுமத்தை கையாண்டு மலையகத்தை சேர்ந்த சின்னஞ்சிறு வீரனான கிருபாகர் ஹரிகிஷன் தனது வெற்றிகளால் வியக்கவைக்கின்றார்.

இலங்கை பாடசாலைகள் மற்றும் இலங்கை செஸ் கழகம் கட்டுகஸ்தோட்டை வலய மட்டத்தில் நடத்திய போட்டியில் முதலாம் இடத்தை பெற்று சான்றிதழ் பெற்றுக்கொண்ட அவர் சர்வதேச செஸ் சங்கம் கண்டி மாவட்ட மட்டத்தில் நடத்திய போட்டியில் சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து கொண்டார்.

இலங்கைசெஸ் சங்கம் மாகாண ரீதியல் பாடசாலை மட்டத்தில் நடத்திய போட்டியில் சம்பியனாகியது மட்டுமன்றி செஸ் பெடரேஷன் மற்றும் கண்டி மாவட்ட தேசிய இளைஞர் சம்மேளனம் இணைந்து நடத்திய ஏழு வயதிற்கு கீழ்பட்டவர்களுக்கான அதிவேக செஸ் போட்டியிலும் சம்பியனானார்.

குயின்ஸ் ஸ்டார் சர்வதேச செஸ் கோர்சிஸ் அகடமி மத்திய மாகாண மட்டத்தில் நடத்திய போட்டியில் முதலாம் இடம் என கடந்த 2010 ஆண்டில் மாத்திரம் வெற்றிகளுக்கு மேல் வெற்றிகளைக் குவித்து வியக்க வைத்திருக்கிறார் ஆறு வயதேயான ஹரிகிஷன்.

இந்த வெற்றிகளின் வெகுமதியாக ஆசிய செஸ் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பும் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருப்பதுடன் அப்போட்டியில் இலங்கையிலிருந்து பங்குபற்றும் மிக வயது குறைந்த வீரர் என்ற பெருமையும் ஹரிகிஷனைச் சேர்ந்திருக்கிறது.

மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட ஹரிகிஷன் தனது இரண்டாவது வயதில் பொம்மைகள் வைத்து விளையாடும் தன் பிஞ்சுக்கரங்களால் செஸ் காய்களை நகர்த்த ஆரம்பித்தவர். செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஹரிகிஷனின் தாத்தா தான் ஹரிகிஷனின் முதல் குரு. குழந்தைப் பருவத்திலேயே ஹரிகிஷனை மடியில் வைத்து செஸ் விளையாட்டைக் கற்றுக் கொடுத்த தாத்தா பேரனின் சாதனைகளைப் பார்ப்பதற்கு பூவுலகில் இல்லாவிடினும் அவரின் நோக்கம் இன்று நிறைவேறி வருகிறது.

ஹரிகிஷனின் பெற்றோர்களான கிருபாகர் – காஞ்சனாதேவி இருவரும் ஆசிரியர்களாவர். ஹரிகிஷனுக்கு துருக்கி, சீனா, கிறீஸ் போன்ற நாடுகளில் கடந்த காலங்களில் நடைபெற்ற போட்டிகளல் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் கிட்டினாலும் குடும்ப பொருளாதார நிலைமைகள் காரணமாக அவரால் பங்குபற்ற முடியாமல் போனமை கவலைக்குரியதாகும்.

எனினும்இ உலக பாடசாலைகளுக்கிடையல் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் மே 9 ஆம் திகதி வரை போலந்தில் நடைபெறவிருக்கின்ற போட்டியில் பங்கேற்பதற்காக போலந்து செல்லும் வாய்ப்பு ஹரிகிஷனுக்கு இப்போது கிடைத்திருக்கிறது.

கண்டி திருத்துவக் கலூரியில் முதலாம் தரத்தில் கல்வி பயிலும் இவர் செஸ் விளையாட்டில் மட்டுமின்றி கல்விச்செயற்பாடுகளிலும் தனது திறமையை வெளிக்காட்டுவதற்கு தவறவில்லை.

„அமைதியான சுபாவம் கொண்ட ஹரிகிருஷ்னுக்கு செஸ் போட்டியில் இருக்கும் ஆர்வத்தைக் கண்ட அத்துறையில் பயிற்சியளித்தோம். ஆசிரியர் பிரியங்கிகா ரணசிங்க மற்றும் துறைசார் பயிற்றுவிப்பாளரான ஈரியகம ஆகியோர் வழங்கிய பயிற்சியின் மூலம்தான் அவரால் இத்தனை சிறப்புப் பெற முடிந்தது“ என்று பெற்றோர் பெருமைகொள்கின்றனர்.

ஹரிகிஷன் தனது ஆறு வயதுக்குள் கண்டியில் மட்டுமின்றி குருணாகல் மற்றும் கொழும்பில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடியிருக்கிறார். சர்வதேச செஸ் சம்மேளனம் ஸ்ரீ லங்கா செஸ் சம்மேளனம், அகில இலங்கைப் படசாலை செஸ் சங்கம், சர்வதேச தரப்படுத்தல் சம்மேளனம், குயின்ஸ்ஸ்டார் சர்வதேச கோர்ச் அகடடமி உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய போட்டிகளில் பங்குபற்றி திறமையை நிரூபித்திருக்கிறார்.

செஸ் போட்டியில் ஹரிகிஷனின் முதலாவது வெற்றி மூன்றாவது வயதில் பதிவு செய்யப்பட்டது. பொல் கொல்லயில் மத்திய மாகாண செஸ் சங்கம் 2008.08.12 அன்று நடத்திய போட்டியில் முதல் முதன் முறையாக பங்கேற்று 7 சுற்றுகள் கொண்ட போட்டியில் இரண்டில் வெற்றியீட்டி சகலரினதும் பராட்டைப் பெற்றார். அதன் பிறகு மாவட்ட மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் பிரகாசித்தாலும் மூன்று வயது வரையிலும் எந்தவொரு பதக்கங்களையும் பெறவில்லை. 2009 ஆம் ஆண்டு முதல் இவரது வெற்றிப் பயணம் ஆரம்பித்தது.

2009 ஆம் ஆண்டு ஜனவரியில் சர்வதேச செஸ் சம்மேளனம், குயீன்ஸ்டார், இன்டர்நெஷனல், கோர்ச் அகடமி மத்திய மாகாணத்தில் நடத்திய போட்டியில் இரண்டாம் இடம். மார்ச் மாதம் ஸ்ரீ லங்கா செஸ் சம்மேளனம் மத்திய மாகாணத்தில் நடத்திய போட்டியில் ஏழாவது இடம், ஏப்ரலில் கண்டி தர்மராஜா பழைய மாணவர் சங்கம் நடத்திய போட்டிகளல் மெரீட் பதக்கம், டிசம்பர் மாதம் கொழும்பு இன்டர்கொண்டினன்டல் ஹோட்டலில் நடைபெற்ற 5 ஆவது ஆசிய செஸ் போட்டியில் வெற்றி என இவரது வெற்றிப் பட்டியல் நீள்கிறது.

இவரது திறமையைப் பாராட்டும் முகமாக கண்டி தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மெரீட் விருது வழங்கி கௌரவித்தது. இலங்கைப் பாடசாலை செஸ் சங்கம் அகில இலங்கைப் பாடசாலை செஸ் சங்கம் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் கடந்த வருடம் நடத்திய போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட இவருக்கு மத்திய மாகாண ரத்னதீப மன்றம் ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலர் ஞாபகார்த்த விருதை வழங்கி கௌரவித்தது.

ஆறு வயதான இவரின் திறமையைச் சரியாக இனங்கண்டுகொண்ட பெற்றோரும் பயிற்றுவிப்பாளர்களும் இனிமேல் 10 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கான போட்டியில் பங்குபற்றுமாறு அறிவுரை வழங்கினர். அதனடிப்படையில் கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் 10 சுற்றுகளில் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை இவர் தனதாக்கி கொண்டார்.

அகில இலங்கை ரீதியிலும் ஆசிய மட்டத்திலும் வெற்றிகளைக் குவித்த ஹரிகிஷன், போலந்தில் எதிர்வரும் இம்மாதம் 29 முதல் மே 9 வரை நடைபெறும் உலக பாடசாலைகளுக்கிடையிலான செஸ் போட்டியில் பங்கேற்பதன் மூலம் முதல் தடவையாகச் சர்வதேச ரீதியில் கால் பதிக்கிறார்.