யாழ்.மாவட்டத்துக்கான மின்சாரத்தை வழங்கிவரும் நொதேர்ன் பவர் நிறுவனம் 10 மெகாவாற்ஸினால் தனது மின் உற்பத்தியைக் குறைத்தமையே அடிக்கடி மின்வெட்டு இடம்பெறக் காரணம் என மின்சார சபையின் யாழ். அலுவலக அதிகாரியொருவர் உதயனுக்குத் தெரிவித்தார்.

17.5 மெகாவாற்ஸ் மின்சாரம் இதுவரை நாளும் வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது 7.5 மெகா வாற்ஸ் மின்சாரமே வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.குறித்த நிறுவனத்தின் மின் பிறப்பாக்கிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலை எப்போது சீரடையுமெனக் கூற முடியாதெனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை யாழ்.குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் பகல் மற்றும் இரவு வேளைகளில் முன்னறிவித்தல் எதுவு மில்லாமல் மின்சாரம் திடீர் திடீரெனத் தடைப்படுவதால் அன்றாட அலுவல்களை நிறைவேற்ற முடியாதுள்ளதாகப் பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குடாநாட்டில் கடந்த சில நாள்களாகத் தொடர்ச்சியாக இந்த மின்தடை பல பிரதேசங்களிலும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. பகல் வேளைகளிலும் இரவு வேளைகளிலும் இந்தத் திடீர் மின்தடை அடிக்கடி ஏற்படுகின்றது.
முன்னறிவித்தலின்றி மேற்கொள்ளப் பட்டு வரும் இந்தத் திடீர்  மின்தடையினால் பாவனையாளர்கள் பெரிதும் விசனமடைந் துள்ளனர்.

இந்தத் திடீர் மின்தடை காரண மாக வீடுகளில் உள்ள மின் உபகரணங்களும் அடிக்கடி பழுதடைகின்றன எனப் பாவனையாளர் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், பகல் நேரங்களில் ஏற்படும் மின் தடை காரணமாக  அரச மற்றும் தனியார் அலுவலகங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட் டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. மின்தடை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள் ளன எனப் பெற்றோர்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.