யாழ்.முற்றவெளிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளால் போடப்படும் பொலித்தீன் பைகள் சீரான முறையில் அகற்றப்படாமையால் அந்தப் பகுதி எங்கும் பொலித்தீன்கள் நிரம்பிச் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலித்தீன் பைகள் குவிந்துள்ள இடங்களில் நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துக்காணப்படுவதாத் தெரிவிக்கப்படுகின்றது.குடாநாட்டுக்குச் சுற்றுலாவரும் தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகளும் கொழும்புக்குப் பயணிப்பதற்காக முற்ற வெளியில் உள்ள தனியார் பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகளும் பயன்படுத்தும் பொலித்தீன் பைகள் பின்னர் அந்தப் பகுதிகளில் வீசப்படுகின்றன.

குறிப்பாக தனியார் பஸ்நிலையம், முனீஸ்வரன் கோயில், புல்லுக்குளம், துரையப்பா விளையாட்டரங்கு, கொட்டடிமீன்சந்தைக்கு முன்னால் உள்ள பகுதி ஆகிய இடங்களிலேயே  அதிகளவு பொலித்தீன் பைகள் அகற்றப்படாமல் இப்போது தேங்கியுள்ளன.கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இந்தப் பகுதிகளில் பொலித்தீன் பைகள் தேங்கிக் கிடைந்தன . எனினும் அப்போது குடாநாட்டில் டெங்கு அபாயம் இருந்தமையால் யாழ்.மாநகரசபை சுகாதாரத் தொழிலாளர்களால் அவை அகற்றப்பட்டு வந்தன. அதன் பின்னர் கிரமமாக அகற்றப்பட்டு வந்த பொலித்தீன் பைகள் கடந்த சில வாரங்களாக அகற்றப்படாமல் விடப்பட்டுள்ளன.
 
இதனால் அந்தப் பகுதி பொலித்தீன் பைகளால் நிரம்பிச் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் புல்லுக்குளத்தின் உள்ளேயும் பெருமளவான பொலித்தீன்கள் தேங்கி யுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனவே யாழ்.மாநகர சபை இதில் அதிக அக்கறை காட்டி இவற்றை உடன் அகற்று வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.