சொந்த வீட்டில் மீள்குடியமர்வதற்காக வீட்டுக் காணியைத் துப்பரவு செய்து குப்பைகளை எரித்த போது அதற்குள்ளிருந்த மர்மப் பொருள் வெடித்ததில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்தவர் உடனடியாக சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.இந்தச் சம்பவம் இளவாலையில் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த ந.அருந்தவராசா (வயது 62) என்பவரே படுகாயமடைந்தார்.

தொடைப்பகுதியில் பலத்த காயமும் ஏனைய இடங்களில் சிறுகாயங்களும் இவருக்கு ஏற்பட்டன.தொடைப் பகுதியில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட போது சிறு இரும்புத் துண்டு ஒன்று மீட்கப்பட்டது. தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இளவாலைப் பொலிஸாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது: பளைய „துப்பாக்கி ரவை“ ஏதாவது வெடித்திருக்கலாம் என்று தெரிவித்தார். சம்பவ இடத்துக்கும் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் கூறினார்.இப்பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு ஒரு வாரத்துக்கு முன்னர் சில குடும்பகள் மீள்குடியமர்ந்து விட்டன. இன்னும் பல குடும்பங்கள் மீள்குடியமர உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.