மணமேடையில் மகனுக்கு திருமணம் நடந்து கொண்டு இருந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த வங்கி ஊழியர் மனைவியின் உடல் உறுப்புகள் தானம் நடந்த சம்பவம் நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.
´
திருச்சி தில்லைநகரை சேர்ந்தவர் மதியழகன் வங்கி ஊழியர். இவருடைய மனைவி ஜெயமணி (48). இவர்களுக்கு பொன்ராஜ், முத்தமிழ்செல்வன், செந்தமிழ்செல்வன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். ஜெயமணியின் 2வது மகன் முத்தமிழ்செல்வனுக்கும், திருச்சி சிந்தாமணியை சேர்ந்த அனிதா கிரேஸிக்கும் இடையே காதல் இருந்து வந்தது.
இவர்களுடைய காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 20ந் தேதி திருமணம் நடத்தவும் பெரியோர்கள் நிச்சயித்தனர். திருமண விழாவுக்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும் வழங்கப்பட்டது.
கடந்த 12ந் தேதி ஜெயமணியும், அவருடைய மகன் முத்தமிழ்செல்வனும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க மோட்டார் சைக்கிளில் லால்குடியில் இருந்து திருச்சிக்கு சென்றனர். லால்குடி மெயின்ரோடு கபிரியேல்புரம் என்ற இடத்தில் வந்தபோது, ஜெயமணி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
ஜெயமணி உடல் நலம் தேறிவிடுவார் என உறவினர்களும், பெரியோர்களும் திருமண ஏற்பாடுகளை ஒருபுறம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஜெயமணிக்கு திடீரென்று மூளைச்சாவு ஏற்பட்டது.
இது குறித்து டாக்டர்கள் ஜெயமணியின் கணவர் மதியழகன் மற்றும் அவருடைய மகன் பொன்ராஜ் ஆகியோரிடம் ஜெயமணியின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் மேலும் 3 பேருக்கு அவரால் வாழ்வு அளிக்க முடியும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து ஜெயமணியின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க அவருடைய கணவர் மதியழகன் மற்றும் மகன் பொன்ராஜ் ஆகியோர் முடிவு செய்தனர். ஆனால் திருமணம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த தகவலை மணமகன் முத்தமிழ்செல்வனுக்கும், அவருடைய உறவினர்கள் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை.
நேற்று காலை 8.30 மணிக்கு ஜெயமணியின் உடலில் இருந்து 2 சிறுநீரகம், கல்லீரல், ஒரு கண் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. பின்னர் அந்த உறுப்புகள் சென்னை, மதுரை, திருச்சியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு 3 பேருக்கு பொருத்தப்பட்டன.
இதற்கிடையே நேற்று காலை 10 மணிக்கு முத்தமிழ்ச்செல்வனின் திருமணமும் நடந்தது. அதன்பிறகே ஜெயமணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்ட சம்பவம் முத்தமிழ்செல்வனுக்கும், திருமணத்துக்கு வந்த உறவினர்களுக்கும் தெரியவந்தது.
இதனை கேட்ட முத்தமிழ்செல்வன் தன் தாயின் பிரிவை நினைத்து கண்ணீர்விட்டு கதறி அழுதார். தாயை விட்டு பிரிந்த சோகத்திலும், அவருடைய உடல் உறுப்புகள் 3 பேருக்கு வாழ்வு அளித்ததை எடுத்துக்கூறி அவரை சமாதானம் செய்தனர்











Comments
Powered by Facebook Comments