ஓஸ்ரேலியா சிட்னி மாநிலத்தில் உள்ள விலாவூட் அகதிகள் தடுப்பு முகாமில் கடந்த இரவு கடும் கலவரம் ஏற்பட்டதாகவும் கட்டிடங்களுக்கு தீவைத்ததாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள பேச்சாளர் சன்டி லோகான் தெரிவித்துள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளில் சுமார் 100பேர் இந்த கலவரத்தில் ஈடுபட்டதாகவும், தளபாடங்கள், கணணிகள், சமயல்பத்திரங்கள், மருத்துவ உபகரணங்கள், உட்பட தடுப்பு முகாமில் இருந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டிருப்பதாகவும் கூரைகளில் ஏறி நின்ற ஓடுகளை கழற்றி அதிகாரிகளை நோக்கி எறிந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 9 கட்டிடங்களுக்கு தீவைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தங்களுக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என்றும் தங்களை தடுப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் கலகக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒஸ்ரேலியாவிற்கு பெருந்தொகையான அகதிகள் வந்திருப்பதாகவும், அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களே இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக ஒஸ்ரேலிய குடிவரவு குடியகல்வுத்துறை அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.
அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அவர்கள் கவலை கொண்டிருப்பதாகவும் இதனாலேயே இவர்கள் வன்முறைகளை நாடியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்த அமைச்சர் வன்முறை இதற்கு தீர்வாகாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களில் யாராவது கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த கலவரங்களுக்கு ஒஸ்ரேலிய தலைமை அமைச்சர் யூலியா கிலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கலவரங்களில் ஈடுபடுவதால் அவர்களுக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட மாட்டாது என்றும் கலவரங்களில் ஈடுபடுவது சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளே பெரும்பாலும் இந்த கலவரத்தில் ஈடுபட்டிருப்பதாக ஒஸ்ரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.