பொல்லாத தமது கணவரை, அவர் தாக்கியதால் ஏற்பட்ட காயம் மாறமுன்னர் மன்னித்து நீதிமன்றுக்குச் சென்று சிறை மீட்டார் மனைவி. இந்தச் சம்பவம் நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் இடம்பெற்றது.
கடந்த வியாழக்கிழமை போதை தலைக்கேறிய நிலையில் வீடு வந்துசேர்ந்தார் கணவர். வந்த கையோடு கணவன்மனைவி இடையே சிறு சச்சரவு. அது வாக்குவாதமாக மாறியது. கோபம் கொப்பளித்த நிலையில் ஓடிச்சென்று தடியை முறித்துக்கொண்டு பாய்ந்து வந்தார். தனது வீராவேசத்தைக் காட்டினார். மனைவிக்குத் தலையில் மட்டுமன்றி உடலெங்கும் காயங்கள்.
அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் பொலிஸ் வந்து பிடித்துச் சென்றது கணவரை. இவரை நேற்று சாவகச்சேரி நீதிமன்றுக்குக் கொண்டுவந்தனர் பொலிஸார்.
இதனை அறிந்துகொண்ட அவரது மனைவி, வைத்தியசாலையில் விசேட அனுமதி பெற்று தலையில் கட்டுடன், ஓடோடி வந்தார் நீதிமன்றுக்கு. சட்டத்தரணி ச.சிவரூபன் மூலம் கணவரைப் பிணையில் விடுவிக்க மனுச் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிவான் குறித்த நபரை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆள்பிணையில் செல்ல அனுமதித்தார். அத்துடன் பிரதி வெள்ளிக்கிழமைகள் தோறும் நீதிமன்றில் கையொப்பம் இட வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
கணவன் வந்தார் வெளியில். மனைவி மீண்டும் சென்றார் வைத்தியசாலைக்கு. அங்கு சென்ற அந்தப் பெண்ணை வைத்தியரும் விடுவித்து வீடு செல்ல அனுமதித்தார்.
நாவற்குழி, கோகிலாக்கண்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் அகிலா (வயது28) என்பவரே அந்தப் பெண் ஆவார்.













