அணு மின்சாரம் மலிவானதோ, அணுமின்சாரம் தயாரிப்பு முறைகள் பாதுகாப்பானதோ, அணு மின் நிலையத்தை நிறுவுவது எளிதானதோ இல்லை என்பதால் உலகில் இனி புதிதாக அணு மின்சார உற்பத்தி நிலையங்களே வேண்டாம் என்று சமாதானத்துக்கான நோபல் விருது வாங்கிய 9 உலக அறிஞர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தியா, சீனா உள்பட அணு மின்சார நிலையங்களில் அதிகம் முதலீடு செய்துள்ள 31 நாடுகளின் தலைவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் அவர்கள் இதைக் குறிப்பிட்டுள்ளனர்.

„அணுகுண்டு எத்தகைய ஆபத்தானது என்பதற்கும் அணு மின்சார நிலையங்கள் எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதற்கும் ஜப்பானைவிட வேறு சிறந்த உதாரணம் உலகுக்குத் தேவை இல்லை.

அனல், புனல் தவிர மின்சாரம் தயாரிக்க இயற்கையில் எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றுக்குச் செலவு அதிகமானாலும் மனித குலத்துக்கு ஆபத்து இல்லாத அந்த வழிகளையே இனி கைக்கொள்ள வேண்டும்.

உலகில் இப்போதுள்ள 400-க்கும் மேற்பட்ட அணுமின்சார உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தின் அளவு வெறும் 7 சதவீதம்தான் என்பதால் இந்த அணு மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தி அவற்றை அக்குவேறு ஆணி வேறாகக் கழற்றி அப்புறப்படுத்தினாலும் பெரிய நஷ்டம் வந்துவிடப்போவதில்லை. அதே சமயம் இப்போதுள்ள தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் அணுக்கதிர் வீச்சிலிருந்து தப்பிக்கும்.

இயற்கையினாலோ, போரினாலோ அணுமின்சார நிலையங்களுக்கு ஆபத்து நேரிட்டால் அதன் விளைவு மிகப்பெரிய பேராபத்தாக இருக்கும் என்பதை ஹிரோஷிமா, நாகசாகி மட்டும் அல்ல செர்நோபில், புகுஷிமாவும் உணர்த்திவிட்டன.

அணு மின்சார நிலையங்களுக்கு எந்த ஆபத்தும் வராவிட்டாலும்கூட அணுக்கழிவுகளைப் புதைப்பது மிகப்பெரிய பிரச்னை என்பதை விஞ்ஞானிகள் அனைவருமே ஒப்புக்கொள்வார்கள்.

மனித குலத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் இந்த அணுமின்சார நிலையங்களை மூடி, அப்புறப்படுத்திவிட்டு ஆபத்தில்லாத வகையில் மின் ஆற்றலைப்பெறுவோம்“ என்று அணு விஞ்ஞானிகள் வேண்டுகோளில் வலியுறுத்தியிருக்கின்றனர்.

ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுட்டு, அடோல்ஃபோ பெரஸ் எஸ்கிவெல், ஜோஸ் ரமோஸ் ஹோர்தா, பெண் நோபல் அறிஞர்கள் பெட்டி வில்லியம்ஸ், மைரெட் மெகயர், ரிகோபெர்டா மெஞ்சு தும், ஜோடி வில்லியம்ஸ், ஷிரின் எபாடி, வாங்காராய் மாதாய் ஆகியோர் கையெழுத்திட்ட நோபல் அறிஞர்கள் ஆவர்.

ஆனால் அணுமின்சார தயாரிப்பு சாதனங்களையும் தொழில்நுட்பங்களையும் விற்கும் நிறுவனங்கள் கற்பனைக்கு எட்டாதவகையில் கோடிக்கணக்கான ரூபாய் லாபத்தில் இயங்குபவை. வளரும் நாடுகளின் அரசியல் தலைவர்களையும் ஆட்சியாளர்களையும் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து வளைத்துப்பிடித்திருப்பவை.

எனவே, „“மக்களின் நன்மைக்காகத்தான் அணுமின்சார நிலையத்தை நாடுகிறோம், இதன் உற்பத்திச் செலவு குறைவு, மூலப்பொருளுக்கு பஞ்சமே வராது, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு இந்த நிலையத்தை 24 மணி நேரமும் கண்காணிப்போம் – அதற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்“ என்று பசப்பு வார்த்தைகளைக் கூறி, நாடாளுமன்றத்தில் உள்ள மிருகபல மெஜாரிட்டியைக் கொண்டு தீர்மானமும் நிறைவேற்றி இந்த நிலையங்களை மேலும் புதிது புதிதாகத் திறந்துகொண்டே போவார்கள். எனவே நோபல் அறிஞர்கள் மட்டும் குரல் கொடுத்துப் பயன் இல்லை, மக்களும் இதன் ஆபத்தை உணர்ந்து ஒன்று திரண்டால்தான் இந்த ஆபத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.