யாழ். போதனா வைத்திய சாலையில் உள்ள எக்ஸ்ரே இயந்திரம் திடீரெனச் செயலிழந்ததால் 40 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அம்புலன்ஸ் மூலம் நேற்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
போதனா வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நோயாளர்களுக்குச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள எக்ஸ்ரே இயந்திரம் மூலம் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அனுப்பி வைக்கப்பட்ட நோயால் அவதிப்பட்ட 40 இற்கு மேற்பட்ட நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எக்ஸ்ரே பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அத்துடன், மேற்படி வைத்தியசாலையில் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்தமையால் ஏனைய நோயாளர்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு உள்ளாகினர்.
 
இதேவேளை யாழ். போதனா வைத்தியசாலையில் செயலிழந்துள்ள எக்ஸ்ரே இயந்திரம் விரைவில் திருத்தப்படும் சந்தர்ப்பம் இல்லாமையால், இன்றும் நாளையும் அதிக எண்ணிக்கையான நோயாளர்களைப் போதனா வைத்தியசாலையில் இருந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப் போவதாக வைத்தியசாலைச் சமூகம் வேண்டுகோள் விடுத்தது.மேற்படி வேண்டுகோளைச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவு உத்தியோகத்தர் நிராகரித்து விட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இன்றும் நாளையும் விடுமுறை நாள்களாக உள்ளமையால் அந்த நாள்களுக்கான கொடுப்பனவு தமது சம்பளப் பட்டியலில் வழங்கப்படுவதில்லை. இதனால் தாம் மேற்கூறப்பட்ட இரு தினங்களும் கடமையாற்ற முடியாது எனவும் நாளை மறுதினம் திங்கட்கிழமை நோயாளர்களை அனுப்பிவைக்குமாறும் அந்த உத்தியோகத்தர் கூறியுள்ளார். இதனால் நோயாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.