சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 35). இவரது மனைவி செல்வி (30). இவர்களுக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது.

சஞ்சீவி (3) என்ற பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தனர். கோவிந்தன் குடித்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் செல்வியும், மகன் சஞ்சீவியும் தூங்கி கொண்டிருந்தனர். பின்னர் கோவிந்தன் மனைவி செல்வியை எழுப்பி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாகவும், அதற்கு செல்வி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த கோவிந்தன் மனைவி செல்வியை அடித்து உதைத்தார். அப்போது செல்வி அலறிய சத்தம் கேட்டு குழந்தை சஞ்சீவி எழுந்து அழுதான்.

இதனால் கோவிந்தனுக்கு மனைவி மீதான ஆத்திரம் குழந்தையின் பக்கம் திரும்பியது. உடனே கோவிந்தன் தனது குழந்தையின் கால்களை பிடித்து தலைகீழாக தூக்கி சுவற்றில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் வீறிட்டு அழுத குழந்தை சஞ்சீவி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தாமோதரன் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சஞ்சீவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து மகனை கொடூரமாக கொலை செய்த கோவிந்தனை போலீசார் கைது செய்தனர்