கனேடிய விசா பெற்றுத்தருவதாகச் சில தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங் கள் வெளியிடும் விளம்பரங்களைக்கண்டு ஏமாறவேண்டாம் என்று கொழும்பிலுள்ள கனேடிய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கனடாவுக்கான விசா பெற்றுத்தருவதாக சில நாணயமற்ற தனி நபர்களும் நிறுவனங்களும் விளம்பரங்கள் வெளியிடுவதாகவும் இவைகளை நம்பி ஏமாறவேண்டாம் என்றும் கனேடியத் தூதரகம் தெரிவித்துள்ளது.இந்த வகையில் இலங்கையர்கள் குறித்த நபர்களுக்கு பெரும் தொகைப் பணத்தை வழங்கி ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் இவ்வாறு மக்கள் ஏமாற்றப்பட்டிருப்பது கவலையளிப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

விசா வழங்குவதற்கென ஸ்தானிகரகத்தில் விசேடமாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கனடாவில் வேலை பெற்று தருவதாக அல்லது தொழில் பயிற்சி பெறுவதற்காக பணம் செலுத்துவதானது கனேடிய விசாவைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவாதமாக மாட்டாது என்று தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.வசதியற்ற மக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு பொய்யான நம்பிக்கைகளை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதனால் இந்த நாணயமற்ற நபர்கள் கனடாவின் கௌரவத்துக்கு பாதகம் செய்கிறார்கள். இதனைத் தவிர்ப்பதற்கு நம்மால் ஆன முயற்சிகளை எடுத்துவருகின்றோம் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.விசா எடுக்கவிரும்புகிறவர்கள் அலுவலக நேரத்தில் கனேடிய விசா வழங்கும் பிரிவில் நேரடியாக விண்ணப்பம் செய்யலாம். இடை நிலைத் தரகர்களில் தங்கியிருக்க வேண்டியதில்லை.கொழும்பு 7/51 ஏ, தர்மபால மாவத்தையில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.