இந்தியா – குஜராத்தில் கரையைக் கடந்த “டவ்தே” புயல் நேற்று மும்பையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சுமார் 90 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மழையால் நகரின் பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்கள் பல மணி நேரம் இருளில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இரவு வரை மும்பை விமான நிலையம் மூடப்பட்டது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் பேருந்து மற்றும் புறநகர் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

26 இடங்களில் சுவர் இடிந்து விழுந்த விபத்துகளில், 8 பேர் காயம் அடைந்தனர்.
பலத்த காற்று காரணமாக மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் 600 மரங்கள் ஒடிந்து விழுந்தன.

ஓவல் மைதானம், கொலாபா, ஹிந்த்மாதா, கிங் சர்க்கிள், தாதர் டிடி போன்ற இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மும்பையிலிருந்து 120 கிலோமீட்டர் தூரத்தில் டவ்தே புயல், மும்பையைக் கடந்து குஜராத் நோக்கிச் சென்று கரையக் கடந்தது.

புயலால் மும்பையில் 214 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மே மாதம் 190 மி.மீ அளவுக்கு மழை பெய்திருந்தது.
40 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் இவ்வளவு மழையை ஒரு புயல் ஏற்படுத்தியிருப்பது இதுவே முதன்முறையாகும்.